இலங்கையின் இன்றைய நவீன கல்விச் சீர்திருத்தத்தில் ஜோன் டியூவியின் பயன்பாட்டு வாதக் கருத்துக்களின் தாக்கம்.

ஒரு  மனிதன் தான் பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கின்றான். இக்கல்வியானது ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி முறையினூடாகவோ அல்லது தனது சொந்த வாழ்நாளில் வரும் படிப்பினைகளாகவோ இருக்க முடியும். 

இத்தகைய கல்வியானது மனிதனின் உயிரோட்டமுள்ள வாழ்க்கையோடு தொடர்புபட்டு தொடர்ச்சியாக அழிவில்லாத ஒன்றாக விளங்குகின்றது. அந்தவகையில்   ஒருவனுடைய வாழ்நாள் முழுவதும் கற்றலும் அதற்கான பிரதிபலிப்புப் பிரயோகமும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இத்தகைய கல்வியின் இன்றைய எதிர்பார்ப்பானது  குழந்தையின் உள்ளே உள்ள அறிவாற்றலை மலரச் செய்வது மட்டுமல்லாது கால சூழலுக்கு ஏற்புடைய பயனுடைய தேவை தீர்ப்புக்கான ஊடகமாக இருக்க வேண்டும் என்பதேயாகும். இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில்  உலகின் பல பாகங்களிலிருந்தும் கல்வி பற்றிய பல்வேறு தத்துவங்களை கல்வித் தத்துவவியலாளர்கள் முன்வைத்துள்ளனர் . இவற்றுள் அறிவியல் உலகை பெரிதும் ஈர்த்துள்ள கோட்பாடாக “பயன்பாட்டுவாதக் கோட்பாட்டினை” குறிப்பிடலாம்.

நடைமுறைச் சூழலில் தற்கால பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதே இப் பயன்பாட்டு வாதமாகும். இது ஜோன் டியூவி, CS.பியர்ஸ், வில்லியம் ஜேம்ஸ், சில்லர் போன்றோர்களின் கருத்து வழிபாட்டினால் உருவாக்கம் பெற்றதாகும். இவர்களுள் ஜோன் டியூவி முதன்மையானவராவார்.

ஜோன் டியூவி (1859 – 1952) இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய சிறந்ததொரு கல்வியிலாளராகவும், நவீன யுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவ ஞானியாகவும் கருதப்படுகின்றார். இவருடைய கல்விச் சிந்தனைகள் அமெரிக்காவில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் பெரிதும் மதிக்கப்படுகின்றன. “கல்வித்துறையின் மிக மிக உயிர்ப்பான சிந்தனையாளர்” என அவரைச் சிலர் குறிப்பிடுவர்.

இவர் மெய்யியல், கல்வியியல், அரசியல், அழகியல் ஆகிய துறைகளில் பயன்கொள் வாதத்தை உருவாக்கச் செய்தவர்களுள் தனித்துவமானவராவார். மேலும் இவர் கல்வி முறை, கல்வித் தத்துவம், கல்வி உளவியல் இம் மூன்றையும் இணைத்து கல்விச் செயல்முறையாக்கினார். அந்தவகையில்  இவருடைய சிந்தனை தேவைக்கும், தேவை தீர்ப்புக்கும் இடையே உள்ள தொடர்பினை எடுத்துக்காட்டி அதில் கல்வியின் முக்கியத்துவம் எந்தளவானது என்று விளக்குவதாகவே அமைந்தது. 

இலங்கையின் இன்றைய நவீன கல்விச் சீர்திருத்தத்தில் ஜோன் டியூவியின் பயன்பாட்டு வாத கருத்துக்களின் தாக்கம் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது தொடர்பாக பார்த்தோமானால்..

முதலாவதாக ஜோன் டியூவி அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் ஒன்றான “கல்வியின் குறிக்கோள்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வியின் நோக்கங்கள் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அவை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தானது  எமது நாட்டின் கல்வித் திட்டத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. 

இலங்கையை பொறுத்தவரையில் கால சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை நவீன உலகுக்கு ஏற்புடைய வகையிலும், நவீன சவால்களை வெற்றி கொள்ளும் வகையிலும் மாற்றியமைக்கப்படுகின்றன. 

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்ப அறிவிற்கே முதன்மையிடம் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையின் தற்கால புதிய கல்வி சீர்திருத்தத்திலும் இதன் போக்கை காணமுடிகின்றது. குறிப்பாக தற்காலத்தில் இளநிலை இரண்டாம் நிலை(6-9) வகுப்பு மாணவர்களுக்கு ICT பாடம் ஒரு கட்டாய பாடமாக பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. 

இது தவிர 13 வருட உத்தரவாதக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு தற்கால உலகுக்கு பொருந்தும்  வகையில் தொழில்நுட்பப் பாடங்களும், தொழிற் கல்விகளும் அறிமுகப்படுத்தப்பட்டு அவை செயல்முறை கற்கைகளாக மாணவர்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டு வருகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் “ மரபு முறைக் கல்வியினை போதிக்கும் முறைகள் இக்காலத்தில் நமக்கு வேண்டாம். அவை பயன் தரா, எனவே அவை மாற்றப்பட வேண்டும்.” என்ற கருத்தை வலியுறுத்தினார். 

இலங்கையை பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் சமயக் கல்வி, சமூகக் கல்வி, ஒழுக்கக் கல்வி போன்ற கல்வி முறைகளை கற்பிக்கப்பட்டன. இவை இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்புடையன அல்ல இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் இலங்கையில் காலத்துக்கு காலம் இலங்கை கல்வி அமைச்சினால் புதிய கல்வி சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

குறிப்பாக அண்மையில் கொண்டுவரப்பட்ட 13 வருட உத்தரவாதக் கல்வியில் தொழில் சார்ந்த பாடங்களை அறிமுகப்படுத்தியதோடு 28 தொழில்கல்வி பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. 

இதன் மூலம் மரபு வழியான கல்விக்கான அடிப்படைகள் மாற்றப்படுவது மட்டுமல்லாது மரபு வழி கல்வி வழங்கும் முறைகளும் மாற்றப்பட்டு நவீன கல்வி வழங்கும் முறை அறிமுகப்படுத்துவதை அவதானிக்கலாம்.

அத்தோடு கல்வி என்பது மாற்றத்துக்கான தொடர்ச்சியான செயற்பாடு. அது ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ச்சிக்கான சக்தியினை உள்ளீர்ப்பதனை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இலங்கைக் கல்விச் சீர்திருத்தத்தில் ஒவ்வொரு சீர்திருத்த முன்வைப்பும் கல்வியில் மாணவர்களின் வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்காகக் கொண்டதே ஆகும்.  

2023 ஆம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தில் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பறையில் மடிக்கணினி மூலமே கற்றல் இடம் பெறும், 2023 தரம் 1,6,10 வகுப்பறைகள் மாற்றத்துக்குள்ளாகும். கணனி அறிவின்றி 2023 இல்ஆசிரியர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட முடியாது போன்ற புதிய சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டன. இவை கல்வியின் மாற்றத்திற்கான தொடர்ச்சியான செயற்பாடாகவும், கற்றல் வளர்ச்சிக்கான சக்தியை உள்ளீர்ப்பதனை நோக்காகக் கொண்டே முன் வைக்கப்பட்டன.

இவற்றோடு பயனுள்ள கலைத்திட்டம் செயல், அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். அந்த வகையில் இன்றுள்ள இலங்கை கல்வி சீர்திருத்தத்தின்படி கைவேலை, சமையல், விவசாயம் தொழில்நுட்பம் என்று பல துறைகளின் ஊடாக பல்வேறுபட்ட செயல்முறை அனுபவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிலைமையை பார்க்கக்கூடியதாக உள்ளது.

பாடசாலைக் கற்றல் அனுபவங்கள், வாழ்க்கைக் கற்றல்  அனுபவங்களோடு தொடர்பு பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார். அந்த வகையில் தான் கற்பது ஒன்று நடைமுறை வேறு ஒன்றாக இருந்தால் அதன் மூலம் எந்த பயனும் இல்லை. 

ஆகவே கற்றல் அனுபவங்கள் வாழ்க்கை கற்றல் அனுபவங்களோடு தொடர்புபடும் வகையில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையின் அன்மைக்கால கல்வி சீர்திருத்தத்தில்  கற்றலுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் விவசாயம் தொழில்நுட்பம் போன்ற தொழில் கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகின்றன.

ஜோன் டியூவி கல்வி நிறுவனங்களை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்கின்ற நிறுவனமாக மாத்திரம் பார்க்கவில்லை.பாடசாலை ஒரு அடிப்படையான சமூகமாக இருக்க வேண்டும் என்றார். ஒரு பாடசாலையே குழந்தைக்கு முதன் முதலில் சமூகம் தொடர்பான ஒரு விழிப்புணர்வை வழங்குகின்றது. 

இன்றய நவீன கல்விச் சீர்திருத்தத்திலும் பாடசாலைகளும் ஏனைய கல்வி நிறுவனங்களும் சமூகம் சார் அம்சங்களை கற்றுக் கொடுக்கின்ற தளமாக சமூகத்தோடு அதிக தொடர்பினை ஒரு குழந்தைக்கு ஏற்படுத்துவதை அவதானிக்கலாம். விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். 

ஆகவே ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால் இலங்கையினுடைய கல்வி சீர்திருத்தத்தில் ஜோன் டியூவி அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். இவருடைய பயன்பாட்டு வாதக் கருத்தானது நடைமுறை உலகுக்கு பெரிதும் ஏற்புடைய ஒன்றாக காணப்படுவதோடு, கற்றல் பாதையை மென்மேலும் வளர்ப்பதற்கான ஒரு உந்து சக்தியாகவும் காணப்படுகின்றது. 

ஜோன் டியூவி அவர்களுடைய பயன்பாட்டு வாத சிந்தனை எமது நவீன கல்விச் சீர்திருத்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அதனுடைய பயன் எல்லா மாணவர்களையும் சென்றடைகின்றதா என்று கேட்டால் இன்னுமும் கேள்விக்குறிய விடயமாகவே காணப்படுகின்றது.

சோமசுந்தரம் ஜேனுஜா

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை 

சிறப்புக் கற்கை மாணவி 

கிழக்குப் பல்கலைக்கழகம்

கலைகலாசார பீடம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.